Thursday, 25 September 2014

லைட்ஸ் ஆஃப்!ராமசாமி நாடாரைத் தெரியாதவர்கள் வடசேரி சந்தையில் வெகு சொற்பம் பாக்குக் கொட்டை வியாபாரத்தில் பழமில்லாமலே கொட்டை எடுத்தவர். மார்த்தாண்டம் சந்தையிலிருந்து தோவாளை வரைக்கும் கடைகளுக்கு வட்டிக்குக் கொடுத்திருப்பவர்.

வடசேரி காய்கறிக் கடைகளுக்கு நடுவே அழுக்கப்பின மண்டியில் இருபது சாக்கு பாக்குப்பைகளை விரித்து வைத்திருப்பார்கள்.
கரும்பாக்கு விலைகுறைச்சல். கொஞ்சம் பழுப்பும் மங்சளுமாய் இருக்கும் பாக்குக் கொட்டையில் மட்டுமே ஈக்கள் உட்கார யோசிக்கும்.

 வெள்ளை வெளேர் சட்டையில் ராமசாமி நாடார் தலையில் துண்டும் நெற்றியில் அய்யாவழி நாமமும் இட்டபடி கணக்கு வழக்குகள் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

அப்பாவோடு சந்தைக்குப் போகும் போதெல்லாம் பல்லாரியைக் கீழே சிதறவிடுபவர்களுக்கு உதவியாக கைகள் நிரம்பிய ஒற்றை பல்லாரியை எடுத்துக் கொடுக்கப் பார்ப்பேன். எட்டுவயதிருக்கும் எனக்கு. திங்கள்நகர் சந்தையில் பணம் பட்டுவாடா முடித்து எஸ்.கே.பி . பஸ்ஸில் வடசேரி முனையில் இறங்கி சந்தைக்குள் நுழைவர்.

சந்தையில் அப்பாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தது சந்தை மனிதர்களோடு. கூடவே ராமசாமி நாடாரிடமும். தொழில்விருத்திக்காக கடன்வாங்கி இருந்திருப்பார் போல.. அப்பாவுக்கு மார்த்தாண்டத்தில் ஓட்டல் வியாபாரம்.

ஓட்டல் கண்ணாடிப் பேட்டிக்குள் நேந்திரம் பஜ்ஜி, சுழியன்,அடுக்குவது என் வேலையாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில். முழு நேர்திரம் பழத்தை அரைவாகாய் கீறி இடைச்சொறுகலாக செவ்வரிசி அவல் சீனிப்பகு வைத்து, மஞ்சள் மாவில் அமிழ்த்தி எண்ணையில் பொரித்தெடுக்கும் பழபஜ்ஜி சுவைக்கு நாஞ்சில் நாடே அடிமை.

வாரநாட்களில் ஓட்டலுக்குத் தேவையான மளிகை காய்கறிகள் பழங்கள் வீட்டுக்கே வந்துவிடும். வார இறுதியில் சந்தைக்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அப்பா வரும் போதுதான்  எப்போதாவது என்னையும் கூட்டி வருவார்.

அப்போது தான் ராமசாமி நாடார் கடையில் உட்கார்ந்திருக்கும் அவரை  மேசை உயரத்திலிருந்து எக்கி எக்கிப் பார்த்திருக்கின்றேன்.
வஜ்ர தேகம், வார்த்தைகளில் அசல் நாகர்கோவில்காரர்களின் இழுவையும் கறாரான பேச்சும். இருக்கும்.

“ செவத்தையாபுரம் தர்மலிங்க நாடார் கணக்கு நோட்டை எங்கிட்டு வச்சீக.. சாமித்தோப்பு குடக்கூலில்லாம் வெரசா வருதா! நாசரேத்துக்கு சாங்காலத்துக்குள்ள சரக்கை அனுப்பி வையும். நல்ல படுதாவ இழுத்து கட்டச் சொல்லிறும். மழையடிக்கும் போலட்ருக்கு” -இராமசாமி நாடார்.

அசப்பில் பாலகங்காதர திலகரையும், மொழிஞாயிறு பாவணாரையும் சேர்த்துப் பிணைந்தது போல் மீசைவைத்திருப்பார். அய்யாவழி கோவில்களுக்குப் பெருங்கொடை கொடுத்தவர்.

 இந்து கிறிஸ்தவ சமயங்களாக பிரிந்து போனபோதும் அந்த இனத்துக்கான இடைவெளியை வியாபார/வர்த்தகத் தொடர்புகளால் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களில் நாடாரும் ஒருவர்.

நான்கு மகன்கள் மூன்று புதல்விகளுமாக மொத்தம் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர். ஆளாளுக்கு ஒரு தொழில் என இன்னமும் காவல்கிணறு முதல் களியக்காவிளைவரைக்கும் கொடிகட்டிப் பறக்கும் வர்த்தகர்கள். ஆனால்?

அவருடைய நான்காம் புதல்வர் ஜீவன் கிஷோர் பெயர் கொடி கட்டிப் பறக்கவில்லை கண்ணீர் அஞ்சலியில் நனைந்தது. எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கின்றதல்லவா! கேள்விப்பட்டிருப்பீர்கள்!

 சென்னையில்உதவி இயக்குனர் ஒருவர் பேரூந்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று! அதே பெயர் தான் இவருக்கும். இல்லை அப்படிச் சொல்லி சமாளித்துவிட முடியாது! இருவரும் ஒருவரே என்னும் உண்மையை நான் மறைத்துவிடவும் முடியாது!

கிஷோருக்கு இயக்குனர் ஆகும் கனவுகள் முளைக்கத் துவங்கியது பதினெட்டாவது வயதில்! கார்த்திகை தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துக்கிடந்தவன். நாகர்கோவில் எக்ஸ்ப்ரஸைப் பிடித்து சென்னை வந்து, மெரினாவில் மயக்கமாய் உறங்கி,  அதிமேதாவி இயக்குனர் ஒருவர் வீட்டுக்கு இரவுபகல் காவலாளியாக வேலைபார்த்து,  அம்பட்டன் தெருவில் மொட்டைமாடி சந்தில் கற்பனைகள் தின்று காகிதங்கள் குடித்து கதைகள் எழுதி ஒவ்வொரு தயாரிப்பாளர் அலுவலகத்தின் வாசலிலும் கார்துடைத்து, மது, மாவா,பான், மயி , மட்டை என எல்லாம் வாங்கிக் கொடுத்து , எடுபிடி வேலைபார்த்து, கதைவிவாதங்களில் கலந்துகொண்டு,தேனீர்க்கடையில் கடன் சொல்லி, கையேந்தி உணவினால் எடையிழந்து,

ஒருநாள் சக அறை நண்பனின் துரோகத்தில் தான் கருவாய்ச் சுமந்த கதையினை இழந்து, மிச்சமாய் இருந்த தன்னம்பிக்கையினை மட்டும் தேக்கி வைத்து உயிர்க் கூட்டை கஞ்சாவின் புகைக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டவன்.

வாழ்வு அவனுக்கு பெரும் சவாலாய் இருக்கவில்லை. கடினங்களின் போதும் வைராக்கியத்தை வைத்துச் சமாளித்துக் கொண்டான்,  அடையாளங்களுக்காய் புறக்கணிப்புகளின் சூட்டை முதுகில் ஏந்திக் கொண்டான். எத்தனையோ தோற்றுப் போனவர்களின் கதைகளை, அவர்கள் தட்டியும் திறக்காத கதவுகளை எல்லாம் கதைகள் செய்து வைத்திருந்தான்.

தான் எழுதிக் கொடுத்த பத்து காட்சிகளும் அப்படியே அச்சுப் பிசகாமல் இரெண்டெழுத்துப் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இடம்பெற்றதைக் கூட அவன் பொருட்டாய் எடுக்கவில்லை, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உள்ளுக்குள் கதறினவன் ஓலம் உடனிருந்த யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

ஒரு புலியின் வேட்டை இரைபோல  சினிமா அவனைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அவன் உயிர் வடிந்து கொண்டிருந்ததை யாருக்கும் அவன் சொல்லவே இல்லை.

தங்கைகள் ஒருவரின் திருமணத்திற்கும் ஊருக்குப் போகாதவன். அம்மாவுக்கு மட்டும் எப்போதாவது கடிதம் எழுதுவான்,. அது அம்பட்டன் தெரு அறை வாசலைக் கூட கடந்திருக்காது.

மெட்ராஸ் ப்ரொடக்சன் தயாரிப்பாளரிடம் கதைசொல்லப் போயிருந்தான். அறைக்குள் என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாது. போதை மிகுந்த பெரும் மழை  நாளான அன்று  அரும்பாக்கம் பேரூந்திலிருந்தபடி,   தன்னுடன் இருந்த உதவி இயக்குனனிடம் தன் கதையில் வரும் இறுதிக் காட்சியொன்றை விவரித்து வந்தவன்....அப்படியே நடித்துக் காட்டுவதாக  வேகமாக இறங்கி பின்னால் வந்த பேரூந்துக்குள் பாய்ந்து மாய்ந்து போயிருக்கிறான்.

எத்தனை வலிமிக்கதான தருணம் அது என்பதை வார்த்தைகளால் உணர்த்தமுடியவில்லை என்னால்.  வாழ்வு நிறைய கற்றுக் கொடுத்திருக்கின்றது. ஜீவன் வெறும் மூன்றங்குல நாளிதழ் செய்தியாகிப் போனான். நாளிதழ் செய்திகள் தாங்கி இருக்கும் கொடூரத்தின் வதையை  நீங்கள் அறியவேண்டுமெனில் உயிரைவிட்டவன் குடும்பத்தை ஓரிருவினாடி நினைத்துப் பார்த்தாலே போதும்.

நான்கு வருடங்களுக்குப் பின்...,
*********************************************

இன்றைக்கு ராமசாமி நாடார் உயிருடன் இல்லை. பழைய பிரேம் போட்ட கண்ணாடிக்குள் பாக்குக் கொட்டை மண்டியில் தலைப்பாகையுடன் புன்னகைக்கிறார். உயிரோடு இருக்கும் போது மூன்றாவது மகன் என்ன செய்கிறான் என்ற கேள்விக்கு மெட்ராஸில் இருக்கிறான் என்று பட்டும்படாமலும் பதில் சொல்லியே ஓய்ந்துபோன உதடுகள் உள்ளுக்குள் மருகும் வருத்தத்தை அந்த புன்னகையில் தான் மறைத்து வைத்திருக்கின்றது போல

வடசேரிச் சந்தையில் பாக்குமண்டிக்காரர்கள் அவரவர் வேலையினை பார்த்தபடி இருக்க..   சர்வோதயா ஊதுபத்தியின் புகைக்கு நடுவே ராமசாமி நாடாரின் புகைப்படத்தினை  க்ளோஸப் ஷாட்டுக்கு ஜூம் பார்த்து ப்ரேம் வைத்துப் பார்த்தேன்...மனதுக்குள்

தோற்றுப்போன ஒருவனது கதையினைச் சொல்லும் படத்தில் முதல் காட்சியாக அது இருந்தது.
டேக் ஓகே! லைட்ஸ் ஆஃப்!

-கார்த்திக். புகழேந்தி.
9/25/2014 

Sunday, 7 September 2014

டெசி கதை

பரவலாகவே முருகன் குறிச்சியில்  எல்லோருக்கும் டெசியைத்
தெரிந்திருக்கும்.  சிமெண்டு நிற கால்சட்டைப் போட்ட முருகன்குறிச்சிக்காரப்
பயல்கள் அத்தனை பேரும் கதீட்ரலில் தான் படிப்பான்கள்.

பள்ளிக்குப் பக்கத்திலே வீடு அமைவதில் ஒரு வசதி.. எத்தனை லேட்டாக வேண்டுமானாலும் கிளம்பலாம். ஒரே ஒரு வருத்தம் ”இன்னைக்கு எங்க ஸ்கூலு லீவு”.. எனப் பொய் சொல்லி கிரிக்கெட் ஆட முடியாது.

சரி டெசி கதைக்கு வருவோம். டெசி முருகன் குறிச்சி வடக்குத் தெருவின் முன்னாள்* ஏஞ்சல்.  டெசியின் அப்பா லாரன்ஸ் அந்த ஊரிலிருந்து இராணுவத்துக்குப் போன முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர். .

பின்னாளில் லாரன்ஸ் பட்டாளத்தாரைக் கண்டாளே நடுங்கும் பொடிப்பயல்களாக நாங்கள் இருந்தோம்... ஆனாலும் அவர் மகள் டெசியை ஒரு நாள் நேரில் பார்த்துவிட ப்ரியப்பட்டவனாகினேன்.  அதற்குக் காரணமும் இருந்தது.

பரிட்சைக்கு மறுநாள் வைக்கும் கோச்சிங் க்ளாஸைக் கட் அடித்துவிட்டு குளக்கரை கிணற்றடியில் பரணி, க்ளாட்ஸன், ராமச்சந்திரன், ராஜ்குமார் சகிதம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது டெசி..கதையை ராமச்சந்திரன் சொல்லத் தொடங்குவான்,

சேகரித்து வைத்த நாவல்,புளியம் பழங்களை உப்பு மிளகாய்ப்பொடி தொட்டு மென்று கொண்டே டெசி கதை  கேட்போம். டெசி கதையினை ராமச்சந்திரன் போல அக்குவேறு ஆணிவேறாக பரபரப்பாய்ச் சொல்ல ஆள் கிடையாது. அவன் டெசி ஊர்க்காரன் என்பதால் அவன் சொல்வதை எல்லாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

திடுக்கிடும் தொனியில் அவன் கதை சொல்லத் துவங்கி கதை முடியும் அத்யாயத்தில் ”போதும்டா வேணாம் பயமா இருக்கு”என்று ராஜ்குமார் நடுங்குவான்.

டெசி ஊரின் பரபரப்புச் செய்தியான நாளில், அதே தெருவைச் சேர்ந்த கிருபாவை அவள் காதலித்துக் கொண்டிருந்திருக்கின்றாள் என்பது லாரன்ஸ் பட்டாளத்தாருக்குத் தெரிந்து விட்டது.

 மதம் விட்டு மதம் மாறலாம் சாதிவிட்டு சாதி மாறமுடியாதென்னும் வித்யாசமான கோட்பாட்டின் அடிப்படையில் டெசியின் தந்தைக்கு கோபம் பீறிட்டு வந்தது.. டெசியின் அம்மாவை வெளியே தள்ளிக் கதவை சாத்திவிட்டு தோளில் தூக்கிப் போட்டு வளர்த்த மகளை, மண்ணெண்னெய் ஊற்றிக் கொளுத்தியேவிட்டார்.

உடல் பற்றி எரிய, அனல் தாங்காமல் கதவை உடைத்துக்கொண்டு தீப்பிழம்புகளோடே வயல் ஓடையை நோக்கிப் பாய்ந்து ஓடி பக்கத்திலிருந்த  குளக்கரை கிணற்றில் குதித்து இறந்துவிட்டாள். மறு நாள் பட்டாளத்தாரை போலீஸ் கைது செய்ய.. சில வருடங்களில் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். இப்போது வரைக்கும் ஊரில் யாருடனும் அவர் பேசிக் கொள்வது இல்லை. ஆனால் ஊர் அவரையும் டெசியையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு  நாளும்.

சரியாக ஊசிகோபுரத்தில் மணி மதியம் ஒன்று அடித்ததும் குளத்தங்கரையிலிருந்து “ஓ”- என்று ஓலம் கேட்குமாம்.. “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்றபடிகிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆடு மேய்க்கப் போனவர்கள் எல்லாம் ஊருக்குள் சொல்ல டெசியின் ஆவி அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாக ஊருக்குள் செய்தி பரவத் தொடங்கி இருக்கின்றது.

கோவில் கொடையில் சாமியாடி ஒருத்தர்  ” மதகுமடை வரப்பில் எம்புள்ளைக்கு கல் ஒன்னு நட்டு வைங்கல...அவ இளங்கன்னியா செத்திருக்கா.. இந்த ஊர் பயலுக அந்த கல்லு பக்கம் அண்டக்கூடாது. பகல்ல ஓலம் போடாம நான் பார்த்துக்கிடுதேன்.. அக்கினி தின்ன புள்ளைக்கு தண்ணி தவிக்குது அதான் குளத்தங்கரை கிணத்தை நீங்காம உலாத்திக்கிட்டு இருக்கா.. குளத்தை ஆடுமாடுக தவிர இனி யாரும் பொளங்கக் கூடாது” என்று குறி சொல்லிவிட்டதால் ஊரே கிணற்றை நெருங்காமல் விட்டு விட்டது.

அதன் பின் ஊருக்குள் ஓலமிடும் சப்தம் கேட்கவேயில்லையாம். வரப்பில் நட்டு வைத்த கல்மட்டும்  மதியம் ஒரு மணிக்கு கிடுகிடுவென் நடுங்குமாம்.   வெள்ளை நிற உடையுடுத்திய டெசி மட்டும் அவ்வப்போது பைபிளோடு  குளத்துப்பக்கம் திரிந்ததைப் பார்த்து  நாவல் பொறுக்க வந்த பொடியன்கள் பயந்து காய்ச்சலாகி இருக்கின்றார்கள்.

பரணி “ கிருபா என்னடா ஆனான்?” .
“அவன் மிலிட்ரிக்குப் போய் போர்ல செத்துப் போய்ட்டானாம்டா”.இராமச்சந்திரன்.

”அந்த கல்லு எங்கடா இருக்கு..” -இது ராஜ் குமார்.

”அங்கல்லாம் நாம போக்கூடாது டா. ஊருக்கு தள்ளி மடை ஒன்னு இருக்கு கருப்பசாமி கோவில்கிட்ட அங்க இருக்கு  ” ராமச்சந்திரனே தான்.

நான் “ டெசி பார்க்க எப்படி இருக்கும்டா “ என்றதும்   .. “ ம்ம்ம் ...இங்கிட்டுதான் திரியும் நீயே பார்த்துத் தெரிஞ்சுக்கோ”  என்று முடித்தான் ராமச்சந்திரன்.

”இங்கேயா?”  எனக் கேட்டபோது தான் தெரிந்தது. நாங்கள்
கட் - அடித்துவிட்டுப் படுத்துக் கிடந்தது அதே கிணற்றடியில் தான்.

 மணி 12:59.

                                                                   -கார்த்திக் புகழேந்தி.  
There was an error in this gadget